Tuesday, November 7, 2017

How Lanka

14 இலட்சம் இலங்கை மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை

 இலங்கையில் 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை என ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினை இதில் அதிகம் தாக்கம் செலுத்துவதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

2016 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்களின்படி இலங்கையில் 10,162 பாடசாலைகளில் 41,43,330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 14 இலட்சம் மாணவர்கள் காலை உணவு உட்கொள்வதில்லையென ஆய்வுகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்குப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு செல்கின்ற அதேவேளை, பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதன் காரணமாக பல பிள்ளைகளுக்கு காலை உணவு விடுபடுவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலை உணவை உட்கொள்ளாவிட்டால் அது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியிலும் உடல் வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் சுமார் 20 இலட்சம் முட்டைகள் வீண் விரயமாவதாகவும் அவற்றை குறைந்த விலையில் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் குறிப்பிட்டது.

வீண் விரயமாகும் உணவுகளை அரசாங்கம் முறையாக முகாமைத்துவம் செய்வதன் ஊடாக எமது சமூகத்தில் வறுமைக்கோட்டின் கீழுள்ள பலர் நன்மையடைவார்கள் அல்லவா?

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் அமைப்பொன்று வைபவங்கள் போன்ற நிகழ்வுகளின் போது மீதப்படும் உணவுகளை குறித்த தரப்பினரிடம் இருந்து பெற்று, வறுமையிலுள்ள மக்களுக்கு விநியோகித்து வருகின்றது.

இவ்வாறானதொரு நடைமுறையை அரசாங்கத்தினால் ஏன் இன்னும் முன்னெடுக்க முடியவில்லை?