பதுளை மாவட்டத்தின் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 – இற்கும் அதிகமான கட்டடங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 98 பாடசாலைகளும் அடங்குவதாக நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதுளை மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
பதுளை, ஹாலி எல, ஹப்புத்தளை, வெலிமடை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த அபாய நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மண் சரிவு அபாயம் நிலவும் சில பாடசாலைகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் இன்று சென்றிருந்தனர்.
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கினலன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மண்சரிவு அபாயத்திற்கு மத்தியில் கல்வியைத் தொடர்கின்றனர்.
மலைப்பாங்கான பகுதியில் இந்த பாடசாலை அமைந்துள்ளதுடன், மழைக்காலங்களில் மிகுந்த அச்சத்துடன் மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரொஸட் தமிழ் வித்தியாலயமும் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், மழை வீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்கான அதிகாரிகளை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்தது.
200-க்கும் அதிக மழை மானிகளை தேவையான பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
பதுளை மாவட்டத்தில் 98 பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரைவில் கவனம் செலுத்த வேண்டியது மலையக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கடமையல்லவா?