யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக முகாம்களில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து சுன்னாகம், கந்தரோடை நலன்புரி முகாம்களில் வசித்து வரும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததால் குறித்த மக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த முகாமிலுள்ள ஐந்து வீடுகளில் முற்றாக வெள்ள நீர் தேங்கியிருப்பதன் காரணமாக அந்த வீடுகளைச் சேர்ந்த மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த முகாமானது மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாக முகாமின் தலைவர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த முகாமைச் சேர்ந்த 37 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்களாக உள்ளமையினால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.