Tuesday, December 5, 2017

How Lanka

மீனவர்களுக்கு எச்சரிக்கை - எதிர்வரும் 8 ஆம் திகதி 08-12-2017 வரை கடலுக்கு செல்ல வேண்டாம்


இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கிழக்கு கரையில் இருந்து 1300 கிலோமீட்டர் தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இந்தியாவை நோக்கி நகரலாம் என்பதால் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட பலத்த மழையும் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யலாம் என அனுமானிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பிரேமலால் தெரிவித்தார்.

கிழக்கு ஆழ்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 90 தொடக்கம் 100 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்களும் கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோரும் அவதானமாக இருக்க வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் பாதிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படும் கடற்பகுதிகளை தவிர்க்குமாறு மீனவர்களை அறிவுறுத்தியுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தலுக்கமைய உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகவுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கடற்படைக்கு சொந்தமாக கப்பல்களும் படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் கிளிநெர்ச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாகயத்தின் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுளார்கள்.

வங்கக் கடலில் தற்போது 1100 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அவற்றுக்கான முன்னாயத்தம் மற்றும் அவசர நடவடிக்கைகள் நிவாரண சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஏற்படும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்களை எவ்வாறு குறைத்துக்கொள்வது எனவும், விசேடமாக கடற்தொழிலாளர்கள் மற்றும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை எவ்வாறு வெளியேற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அனர்த்தம் தொடர்பாக அவசர அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்வதற்கு தொலைபோசி இலங்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 0212285330, 0772320528 இந்த இலக்கங்களுடன் தொடர்புகளை மேற்கொள்ளமுடியும்.