நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தமிழ் மொழிப் பாடத்தில் இடம்பெற்ற கட்டாய வினா ஒன்றில் தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளமையால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இது தொடர்பில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் சரியான மேற்பார்வை செய்யாமல் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டமை தொடர்பில் துறை சார்ந்த பேராசிரியர்கள் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
க.பொ.த. சாதாரணப் பரீட்சையின் தமிழ்ப் பாடம் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றது.
இதில் புதிய பாடத்திட்டம் பகுதி மூன்றில் முதலாவது வினாவில் உரோமன் இலக்கம் 9 ஆவது கேள்வியில் தத்தை விடு தூது என்பது தி. த. கனகசுந்தரம்பிள்ளை இயற்றிய செய்யுளாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தத்தை என்பதன் பொருள் யாது? தத்தை விடு தூதினூடாக ஆசிரியர் யாருடைய விடுதலை பற்றி குறிப்பிடுகிறார்? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் தத்தை விடு தூது தி.த.சரவணமுத்துப்பிள்ளையால் எழுதப்பட்டது.இதைத் துறை சார்ந்த பேராசிரியர்களும் உறுதிப்படுத்தினர்.
மாணவர்களின் பாடத்திட்டத்திலும் தத்தை விடு தூதின் ஆசிரியர் தி.த.சரவணமுத்துப்பிள்ளை என்றே தரப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சை எழுதிய மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இது விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் குழப்பமடைந்த மாணவர்களுக்கான பொறுப்பை ஏற்று தவறைத் திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் தி.த சரவணமுத்துப்பிள்ளை, தி.த.கனகசுந்தரம்பிள்ளை ஆகியோர் சகோதரர்கள் எனவும் ஏன் இவ்வாறு ஒரு தவறான தகவலை பரீட்சைத் திணைக்களம் வழங்கியது எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.