இலங்கையிலுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக துறைசார் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் ரயில்வே தொழிற்சங்கள் கடந்த சில தினங்களாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால், ரயில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அத்தியாவசிய சேவையாக ரயில் சேவையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் பொது சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வோருக்கு எதிராகவும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தால் இராணுவத்தினரை சேவையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட இராணுவ குழுவொன்றை இந்தியாவுக்கு அனுப்பி பயிற்சி வழங்கி, அவர்களை ரயில் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.