தேங்காய், அரிசி ஆகியவற்றின் விலை உயர்வால் மக்கள் கடும் சீற்றத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில், மேற்படி பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிராகப் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அரிசி, தேங்காய் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடாக விளங்கிய இலங்கை இன்று இறக்குமதியை நம்பியிருக்கின்றது என்று சமூகவலைத்தளங்களிலும் விமர்சனக்கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
தேங்காய் விலை உயர்வே கடந்த சில மாதங்களாக அரசுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்து வருகின்றது.
இவ்வாறானதொரு சூழலில் மாத்தறை மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லறைத் தேங்காய் விற்பனையாளர்கள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தேங்காய் கொள்வனவைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தின் மொத்த மற்றும் சில்லறைத் தேங்காய் விற்பனையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி உயர்ந்த விலையில் தேங்காய்களை விற்பனை செய்து வருவதாகக் கூறி அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில தினங்களாக நுகர்வோர் அதிகார சபை இவ்வாறு மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் 100 ரூபாவுக்கு அதிகமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்த பலரை நாளை 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
இதன் காரணமாகவே அரசுக்கு எதிராக இவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அரசு 75 ரூபா தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
ஆனால், குறைந்தபட்ச மாக 87 ரூபாவுக்கே மாத்தறை மாவட்டத்தில் தேங்காய் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு பொதுமக்கள் முறைப்பாடு அளித்தமையின் அடிப்படையிலேயே மேற்படி சுற்றி வளைப்பு நடவடிக்கையில் நுகர்வோர் அதிகாரசபை ஈடுபட்டுள்ளது.
அரசு 75 ரூபா கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்திருந்தாலும், பற்றாக்குறையின் காரணமாக அதிகூடிய விலையில் தேங்காயைக் கொள்வனவு செய்ய வேண்டிய சூழல் காணப்படுகிறது.
அரசு தற்போது சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க ஆரம்பித்துள்ளதால் தற்காலிகமாகத் தேங்காய் விற்பனையில் ஈடுபடப் போவதில்லை என்று இவர்கள் அரசுக்கு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளனர்.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இம்முறை தேங்காயும் தேர்தலில் தாக்கம் செலுத்தும் காரணியாக மாறியுள்ளது.
இவ்வருடத்தில் முதல் ஆறு மாதகாலப் பகுதியில் நாட்டில் நிலவிய கடுமையான வறட்சி தேங்காய் உற்பத்தியைப் பெரிதும் பாதித்திருந்தது.
நாட்டில் தேங்காய்க்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக தேங்காய் இறக்குமதிக்கு இருந்த கட்டுப்பாடுகளையும் அரசு தகர்த்துள்ளது.
தேங்காய் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பொதுமக்களின் கேள்வியை அரசால் பூர்த்தி செய்ய முடியாதுள்ளது குறிப்பிடத்தக்கது.