Tuesday, December 19, 2017

How Lanka

ஆஷஸ் மீண்டும் ஆஸ்திரேலியா வசம் - தொடர்ந்து சொதப்பும் இங்கிலாந்து வீரர்கள்


3வது டெஸ்ட்டிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பேர்த் நகரில் நடைபெற்றது.


இந்த போட்டியில் அபார வெற்றியை பதிவுசெய்த ஆஸ்திரேலிய மீண்டும் ஆஷஸ் கிண்ணத்தை தனதாக்கியுள்ளது.இந்த டெஸ்டில் இங்கிலாந்து நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அலஸ்டைர் குக் (7) ஸ்டோன்மேன் (56) வின்ஸ் (25) ஜோ ரூட் (20) ஆகியோர் விரைவாகவே ஆட்டமிழக்க இங்கிலாந்து 131 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.


அதன்பின்னர் 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்த்த டேவிட் மாலன் மற்றும் பேர்ஸ்டோவ் ஜோடி 237 ஓட்டங்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் 119 ஓட்டங்களையும், கன்னி சதம் பெற்ற மாலன் 140 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 368 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், அதன்பின்னர் மீதமான 6 விக்கெட்களை வெறுமனே 36 ஓட்டங்களுக்கு பறிகொடுக்க, இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 403 ஓட்டங்கள் பெற்றது.


பதிலுக்கு ஆடும் ஆஸ்திரேலிய தமது முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி 9 விக்கெட்களை இழந்து 662 ஓட்டங்கள் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணித்தலைவர் ஸ்மித் 239 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஷ் 181 ஓட்டங்களையும் குவித்தனர். பதிலுக்கு விளையாடிய இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் பறிகொடுத்தது. இளம் வீரர்கள் வின்ஸ், மாலன் ஆகியோர் அரைச்சதமடித்தனர் .ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் ஹெஸ்ஸெல்வூட் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.இன்றைய போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 3-0 என்று ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.