Wednesday, December 20, 2017

How Lanka

முதலாவது T-20 மீண்டும் சொதப்பிய இலங்கை அணி

கட்டக் நகரில் இந்தியா இலங்கை இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா இலங்கை இடையே இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 5-வது ஓவரில் மேத்யூஸ் பந்தில் ரோகித் சர்மா 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடியது.


ஆட்டத்தின் 13-வது ஓவரை வீசிய பிரதீப், ஷ்ரேயாசை அவுட் ஆக்கினார். 24 ஓட்டங்கள் எடுத்த ஷ்ரேயாஸ் பெவிலியன் திரும்ப அடுத்ததாக டோனி களமிறங்கினார்.


இருவரும் அதிரடியாக விளையாட அணியில் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 15-வது ஓவரில் 61 ஓட்டங்கள் எடுத்த ராகுல், பெரேரா பந்தில் அவுட் ஆனார்.

இறுதி கட்டத்தில் துடுப்பாட வந்த மணிஷ் பாண்டே 2 சிக்சர்கள் அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்களை எட்டியது.

டோனி 39 ஓட்டங்களுடனும், பாண்டே 32 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் மேத்யூஸ், பிரதீப், பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.



இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லா, உபுல் தரங்கா ஆகியோர் களமிறங்கினர். டிக்வெல்லா 13 ஓட்டங்கள் எடுத்து உனத்கட் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.


அடுத்ததாக குசல் பெரேரா களமிறங்கினார். தரங்கா 23 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பெரேராவும் 19 ஓட்டங்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர்களை தொடர்ந்து வந்தவர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்களும், பாண்டியா 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், உனத்கட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் சஹால் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி 22-ம் திகதி நடைபெற உள்ளது.