Tuesday, January 2, 2018

How Lanka

டிரம்ப் எச்-1பி விசாவில் கெடுபிடி - ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்

அமெரிக்காவில் எச்-1பி விசாவில், அதிபர் டிரம்ப் அரசு மேற்கொண்டுள்ள கட்டுப்பாடுகளை அடுத்து அங்கு வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கப் பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்ற அதிபர் டிரம்ப் அரசின் கோட்பாடுகளை அடுத்து, அந்நாட்டில் பல்வேறு துறைகளில் புதிய விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அமெரிக்காவில் பணிபுரியும் மற்றும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டினர் தற்காலிகமாக எச்1பி விசாவை நீட்டிப்பதற்கு உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு உதவும் கிரீன்கார்டு வரும் வரை எச்1பி விசாவை நீட்டித்து அங்கு வசிக்கலாம் என்ற வழக்கமான நடைமுறைக்கும் அரசு செக் வைத்துள்ளது.

இந்த செயலால், அமெரிக்காவில் அதிகமாக வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்பவர்கள், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய ஐடி நிறுவனங்களின் தலைமை அமைப்பான நாஸ்காம், இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் இன்னும் சில வாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஆண்டுதோறும் தற்காலிக குடியேற்றத்திற்கான 85,000 எச்1பி விசாக்களை அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.

இதில் 65 ஆயிரம் பேர் வேலைக்காக அமெரிக்கா செல்லும் நிலையில், 20 ஆயிரம் பேர் அமெரிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்காக செல்கின்றனர். இவற்றில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது