பிணைமுறி மோசடி குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த டிசம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அதன் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிக்கையின் முக்கிய விடயங்களை தெரிவித்து, அவை குறித்து எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக உரையாற்றியிருந்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பிணைமுறி அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விடயம் தொடர்பாக கேள்விப்பட்டதும் புதுவருட தினத்தன்றே கொழும்பு திரும்பிய பிரதமர் ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றிற்கு நேரம்கேட்டுள்ளார்.
பிணைமுறி அறிக்கை தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அந்த அறிக்கையின் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்குமே ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டதாக சிரேஷ்ட ஐ.தே.க. உறுப்பினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் பிணைமுறி அறிக்கையின் பிரதிகள் பிரதமருக்கு கிடைக்கவில்லை என்பதுடன், ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நேரமும் ஒதுக்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
எனினும் புதன்கிழமையன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்குச் சில மணி நேரம் முன்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதமர் ரணிலிடம் தான் உரையாற்றவுள்ள விடயங்கள் தொடர்பாக தெரிவித்துள்ளார்.
இதுவே அறிக்கை தொடர்பாக பிரதமருக்கு முதலில் கிடைத்த தகவல்களாகவும் அமைந்திருந்துள்ளன. அப்போது கூட பிரதமருக்கு பிணைமுறி அறிக்கையின் நகல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை.
ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடு பிரதமர் மீதான விசுவாசத்தையும், நம்பிக்கையையும் அவர் இழந்துவிட்டதனை காண்பித்து நிற்கின்றதா என அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது