Sunday, January 14, 2018

How Lanka

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் KP-யும் முக்கிய குற்றவாளி என்றது சி.பி.ஐ!

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகத்தைப் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்துள்ளார்.

கடந்த இரண்டு இதழ்களில் வெளியானதன் தொடர்ச்சியாக, அந்த நூலிலிருந்து சில பகுதிகள்...

புலிகள் தயாரித்த பெல்ட் பாமைக் கண்டுபிடித்து விட்ட பெருமிதத்துடன் சி.பி.ஐ அதிகாரிகள் காணப்பட்டார்கள். ஆனால், ‘‘இது பெல்ட் பாம் அல்ல, ஜாக்கெட் ஹோல்ஸ்டர்’’ என்று நான் சொன்னதும் என்னை அவர்கள் அடித்தார்கள்.

புலிகளின் சிறப்புப் படைப்பிரிவு போராளிகள், ‘நடந்து செல்லும் வழியில் நிறையப் பொதிகளைச் சுமக்க வசதியாக இருக்கும்’ என்பதற்காக ‘ஜாக்கெட் ஹோல்ஸ்டர்’ அணிந்தார்கள். இது சாதாரண ஒன்றுதான்.

ஆனால், ஏதோ முதன்முதலாக ‘ஸ்ரீபெரும்புதூர் நடவடிக்கைக்காக’ என்றே இந்த ஜாக்கெட்டை வடிவமைத்தார்கள் என்பது போல் சி.பி.ஐ சிறப்புப் புலனாய்வுக்குழு ஒரு ‘கதை’யைக்கட்டியது. இதை நான் மறுத்து உண்மையைச் சொன்னதுதான் அவர்களது கோபத்துக்குக் காரணம்.

அவர்கள் கையிலிருந்த புகைப்படத்தைக் காட்டி, ‘‘பெல்ட் பாம் இப்படித்தான் செய்யப்பட்டது. இல்லையா?’’ என்றார்கள். ‘‘தெரியாது. நான் எந்த பெல்ட் பாமையும் பார்த்ததில்லை’’ என்றேன்.

சரி, உனக்குத் தெரியாதென்றே வைத்துக்கொள்வோம். இந்தப் படத்தில் உள்ளவாறு வெடிகுண்டு செய்ய முடியுமா, முடியாதா?’’ ‘‘ம்... தியரிப்படி செய்ய முடியும்!’’ ஒரு வெள்ளைத்தாளை என்னிடம் நீட்டி, ‘‘எங்கே... இதில் படம் வரைந்து காட்டு’’ என்றார்கள். வரைந்து கொடுத்தேன்.

அதை எடுத்துக்கொண்டு தியாகராஜனைப் பார்க்கச் சென்றார்கள். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இரு அதிகாரிகளும் திரும்பி வந்தார்கள். கூடவே பென்சில், பேப்பர், ஸ்கேல், ரப்பர் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள். அவற்றைக் கொடுத்து, ‘‘முன்பு பேனாவால் வரைந்ததையே இன்னும் தெளிவாக, அழகாக வரைந்து பாகங்களைக் குறித்து வை. திரும்ப வருகிறோம்’’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

மதியம் இரண்டு மணி வாக்கில் திரும்பி வந்தார்கள். ரமேஷ் கையில் ஒரு மினி டேப் ரெக்கார்டர். தன்மையாக என்னிடம், ‘‘இந்த பெல்ட் பாமை எப்படிச் செய்வதுன்னு நீ சொன்னது சரியா விளங்கல. அதனால, தெளிவா நிறுத்தி நிதானமாச் சொல்லு. கேட்டுத் தெரிந்து கொள்கிறோம்’’ என நீட்டினார்கள்.

ஓ... கடைசியில் இதுதான் திட்டமா? நான்தான் இதைச் செய்ததாக ஒப்புக்கொள்ள வைக்க நினைக்கிறீர்களா? இதற்குத்தான் இத்தனை சித்திரவதைகளா?’ பட்டென்று புரிந்து போனது அவர்களின் திட்டம்.


இலங்கை, தெற்காசிய நாடுகள், வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா என உலகின் பல நாடுகளுக்கும் சென்று கண்டுபிடிக்கத் தவறிய ‘பெல்ட் பாம்’ விஷயத்தை இப்போது என் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். என்ன செய்ய முடியும்?

கோடியக்கரை சண்முகம் தூக்கில் தொங்கி இறந்ததற்குப் பிறகு நான் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதே உண்மை. தவிர, அப்போது எஞ்சியிருந்த என் ‘மனநிலையே’ வேறு. படுத்துத் தூங்க வேண்டும்; அல்லது, இறந்து போய்விட வேண்டும். இரண்டுமற்ற போதை நிலையில் பிதற்றிக் கொண்டிருந்தேன். அதனால் ‘விட்டால் போதும்’ என்ற முடிவுக்கு வந்து நின்றேன்.

அவர்கள் கேட்டபடி வரைந்து கொடுத்து, டேப் ரெக்கார்டரிலும் பேசிக் கொடுத்து விட்டேன். ‘எனக்கான தூக்குக் கயிற்றை நானே மாட்டிக்கொண்டேன்’ என்பது தெரியாமலேயே!

KP என்கிற குமரன் பத்மநாபன், விடுதலைப் புலிகளின் படைக்கலக் கொள்முதல் பிரிவுப் பொறுப்பாளர். உலகம் சுற்றிக் கொண்டிருந்தவர். 2002-ம் ஆண்டு வாக்கில் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அதனால் ‘பொறுப்பை’ பறித்து, புலிகள் கட்டமைப்பிலிருந்து அவரை ஓரம்கட்டியிருந்தார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்த KP-யும் முக்கிய குற்றவாளி என்றது சி.பி.ஐ. அவர்தான் பெல்ட் பாமை அனுப்பியிருக்க வேண்டும், அல்லது இந்தியாவுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்க வேண்டும் என்று சந்தேகித்தார்கள்.

இதனால், ‘இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளி’ எனச் சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் ‘KP’ அகப்படவேயில்லை! 2009 மே 18 அன்று முள்ளிவாய்க்கால் இறுதிச் சண்டையில், ‘விடுதலைப் புலிகளின் தலைமை’ ஏறக்குறைய வீழ்ந்து மறைந்து போனது.

அதன்பிறகு ‘KP’ தன்னை விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக அறிவித்துக்கொண்டார். ஆனால், அப்போது அவர் ‘இந்திய-இலங்கை’ உளவுப் படைகளின் ‘முகவராக’ (Agent) இருந்தார் என்பதே உண்மை. சுமார் இரண்டு மாதங்களுக்குப்பின் மலேசியாவில் ‘கைது நாடகம்’ ஒன்று அரங்கேற்றப்பட்டு, KP கொழும்பு அழைத்துச் செல்லப்பட்டார்.

இலங்கை அரசின் விருந்தினர் மாளிகை ஒன்றில் ‘வீட்டுக் காவல்’ என்ற போர்வையில் வைக்கப்பட்டார். ஆனால், இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்‌ஷேவின் சிறப்பு விருந்தினராகவே இருந்தார். அங்கிருந்தவாறே விடுதலைப்புலிகளின் அயல்நாட்டுக் கட்டமைப்பை உடைத்தெறியும் வேலையை இந்திய - இலங்கை உளவு நிறுவனங்களோடு சேர்ந்து ஒருங்கிணைத்தார்.

அந்தப் பின்னணியில் 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெய்லி மிர்ரர்’ என்ற ஆங்கில நாளிதழுக்கு KP ஒரு பேட்டியளித்தார். அதில் ராஜீவ் காந்தி கொலை விவகாரம் தொடர்பான சில தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.

அதன் சாரம்... ‘‘இந்திய அதிகாரிகள் என்னை 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள். ராஜீவ் காந்தி கொலைச் சதி குறித்து விசாரிக்க சி.பி.ஐ தலைமையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக் குழு (MDMA) அதிகாரிகள், 2010-ல் என்னைச் சந்தித்தனர்.

அது ஒரு ‘நேர்காணல்’தான். விசாரணை அல்ல! இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அப்போது உடனிருந்தார்கள். ஆனால் அவர்கள் வெறும் ‘பார்வையாளர்கள்’ மட்டுமே.

இந்தியக் குழு முதலில் தெரிந்துகொள்ள விரும்பியது, ‘ராஜீவ் காந்தி கொலை பற்றி முன்கூட்டியே எனக்குத் தெரியுமா?’ என்பது. எனக்குத் தெரியாதென்றும், சம்பவம் நடந்தபோது நான் இந்தியாவில் இல்லை என்றும் பதிலளித்தேன்.

அடுத்ததாக, ‘அந்த நடவடிக்கைக்கு நான் நிதி வழங்கினேனா?’ என்பது. அதையும் மறுத்தேன். கடைசியில், பெல்ட் பாம் மற்றும் சிவராசன் வைத்திருந்த துப்பாக்கி குறித்துக் கேட்டனர். ‘இரண்டையும் நான் வாங்கித் தந்தேனா?’ என்பது கேள்வி. நான் ‘இல்லை’ என்றேன்.

‘RDX வெடிமருந்தை இந்தியாவிலேயே வாங்க முடியும். எனக்குத் தெரிந்தவரை பெல்ட் பாம் வெளிநாட்டில் வாங்கப்படவில்லை. அது ஓர் உள்ளூர்த் தயாரிப்பு’ என்றேன். என் கருத்தை அவர்களும் ஆமோதித்தார்கள் என்றே சொல்லலாம்.

2011-ல் நடந்த இரண்டாவது சந்திப்பின்போது,சி.பி.ஐ அதிகாரிகள் வரவில்லை. வேறு துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.அது ஒரு கலந்தாலோசனை!’’

KP என்கிற குமரன் பத்மநாபன் இப்படிப் பேட்டி அளித்திருந்தார்.



இந்த KP-க்காகத்தான், நான் உள்பட இன்னும் பல பேரை சி.பி.ஐ கொடூரமாக சித்திரவதை செய்தது. ஆனால் அவர் இலங்கையால் கைது செய்யப்பட்ட பிறகு, முறைப்படி அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டவில்லை. ஏன்?

இத்தனைக்கும் KP-யைக் காவலில் எடுக்க இந்தியாவுக்குத்தான் முதல் உரிமை உண்டு. சர்வதேச அரங்கில் ‘இன்டர்போல்’ சிவப்பு எச்சரிக்கையை இந்தியாதான் முதலில் அறிவித்தது. மலேசியாவில் அவர் பிடிபட்ட தகவல் அறிந்த உடனேயே, இந்தியா அவரைத் தங்களிடம் ஒப்படைக்கக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்ததென்னவோ வேறு.

கொழும்பு விருந்தினர் மாளிகையில், ஒய்யாரமாக அவரோடு உட்கார்ந்து டீயும் வடையும் சாப்பிட்டபடி ‘பேட்டி’ கண்டு திரும்பியிருக்கிறது இந்த பாரத தேசத்தின் சி.பி.ஐ. ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக்குச் செய்யும் பெரும் துரோகம் இது!

அது மட்டுமல்ல... நாட்டின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான KPயைச் சந்தித்துப் பேசிய விஷயத்தைக்கூட இரு நாட்டு மக்களிடமும் மறைத்திருக்கிறது சி.பி.ஐ. என்ன ஒரு கள்ள மௌனம்?

இரண்டாண்டுகள் கழித்து KP-யே பேட்டி கொடுத்த பிறகுதான் விஷயம் வெளியே தெரிந்தது என்றால் என்ன அர்த்தம்?

அப்போது, இன்றைய பிரதமர் நரேந்திர மோடி கசப்பாக உதிர்த்த வார்த்தைப்படி ‘மா-பேட்டா’ (அம்மா-பிள்ளை) ஆட்சிதான் மத்தியில் இருந்தது.

சுமார் 10 ஆண்டுகள், வானளாவிய அதிகாரங்களைக் கை கொண்டிருந்த அந்த ஆட்சி, உண்மைச் சதியாளர்களைக் கண்டுபிடிக்க சிறு துரும்பையும் அசைக்கவில்லை, ஏன்?

சி.பி.ஐ விட்ட ஓட்டைகளை இன்னும் கண்டுபிடிக்க வில்லை, ஏன்?

ஜெயின் கமிஷன்’ இறுதி அறிக்கை எழுப்பிய வினாக்களுக்கு இன்னமும் விடை தேடவில்லையே, ஏன்?

(அடுத்த இதழில் முடியும்...)

- Vikatan