Friday, February 16, 2018

How Lanka

நியூசிலாந்து நிர்ணயித்த மலைபோன்ற இலக்கை துரத்தி அடித்து சாதனை வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி

 நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், 244 ஓட்டங்கள் இலக்கை அவுஸ்திரேலிய அணி துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையே முத்தரப்பு டி20 போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆக்லாந்தில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி மார்டின் கப்தில், மூன்ரோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.


இந்த இணை, அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 100 ஓட்டங்களை 9.2 ஓவர்களிலேயே எட்டியது. மூன்ரோ 33 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 76 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

அதன் பின்னர் களமிறங்கிய செய்ஃபெர்ட் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கப்தில் 49 பந்துகளில் சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து, 54 பந்துகளை சந்தித்த கப்தில் 6 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 105 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய அவுஸ்திரேலிய அணியில், வார்னர் மற்றும் டி’ஆர்கி இணை நியூசிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தது.

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 121 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 24 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 59 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த கிறிஸ் லின் 18 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 36 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆகினர். அதிரடியில் மிரட்டிய டி’ஆர்கி, 44 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ஓட்டங்கள் குவித்தார்.

அதன்பிறகு வந்த ஆரோன் பிஞ்சின் அதிரடியால், அவுஸ்திரேலியா 18.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பிஞ்ச் 14 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில், Chase செய்யப்பட்ட பெரிய இலக்கு இதுவாகும். இதன்மூலம், பெரிய இலக்கை எட்டிய அணி, என்ற பெருமையை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது.



இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 236 ஓட்டங்களை விரட்டி பிடித்ததே சாதனையாக இருந்தது.