Tuesday, March 6, 2018

How Lanka

கண்டி , அம்பாறை கலவரம் தொடர்பில் சம்பந்தன் ஜயா அறிக்கை

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முடியும் என மக்கள் நினைக்கின்றார்களா என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நாம் பேச வேண்டும்.

அம்பாறை சம்பவம் ஹோட்டல் ஒன்றின் சந்தேகத்திற்கிடமான இளைஞர் ஒருவர் தொடர்பிலானதாகும். அம்பாறை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு, பள்ளிவாசல்களுக்கு மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மிக அருகாமையில் பொலிஸ் நிலையம் அமையப்பெற்றுள்ளது.

எனினும் தாக்குதலுக்கு வந்தவர்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிச் சென்றுள்ளனர்.

கண்டியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களின் போது மற்றுமொரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை.

இவ்வாறான சம்பவங்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றம் இழைத்து தப்பிச் செல்ல முடியும் என்பதே இந்த சம்பவங்களின் மூலம் புலனாகின்றது. சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள முடியும் என மக்கள் நினைக்கின்றார்கள்? சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினர் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான சம்பவங்களினால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளமையே இவ்வாறான சம்பவங்களின் மூலம் தெளிவாகின்றது.

இதனை நியாயப்படுத்திவிட முடியாது, நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் நீதியை நிலைநாட்டக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

நடு வீதியில் நீதி நிலைநாட்டப்படுமாயின் அது துயர்மிக்க நிலைமையாகவே கருதப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வன்முறை சம்பவத்தின் பின்னணியில் பொலிஸார் - சிங்கள ஊடகம்

 கண்டி, தெல்தெனிய, திகன பிரதேச்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட பேரினவாத தாக்குதலுக்கு பொலிஸாரின் உதவி கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தடுத்திருக்க கூடிய மோதல் கண்டி நகரம் முழுவதும் பரவுவதற்கு பொலிஸார் காரணமாக இருந்துள்ளனர். அது தொடர்பில் உரிய முறையில் செயற்படாமையே இதற்கான பிரதான காரணமாக கூறப்படுகின்றது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை கோபப்படுத்துவதற்காக சில அதிகாரிகள் காரணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் கிடைத்துள்ள தகவல்களுக்கமைய குற்ற விசாரணை திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இனவாத வன்முறை குழுக்கள் கற்களுடன் மோதலுக்கு தயாராக இருப்பதனை அறிந்து கொண்ட போதிலும் அவர்களை கலைப்பதற்கான பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததனை அவதானிக்க முடிந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அந்த பிரதேசத்தில் மோதலை ஏற்படுத்தி கொள்வதற்காக பல வெளியாட்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.