Wednesday, March 28, 2018

How Lanka

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2017ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

Check O/L Exam - 2017 Result என்ற பரீட்சை திணைக்களத்தின் இணைத்தளத்தில் பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.


கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண பரீட்சையில் ஆறு இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பரீட்சைக்கு தோற்றியிருந்த 969 பேருக்கு பெறுபேறுகள் வெளியிடப்படமாட்டா என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே அவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கம்பஹா - ரட்னாவளி மகாவித்தியாலயத்தை சேர்ந்த கசுன் செனவிரட்ன, ஷாமோதி சுபசிங்க, கண்டி - மகளிர் கல்லூரியின் நவோதயா ரணசிங்க, கண்டி - மஹமாய கல்லூரியின் லிமாஷா விமலவீர, மாத்தறை - சுஜாதா வித்தியாலயத்தின் ஆர். லக்பிரியா, இரத்தினபுரி - சீவலி மகாவித்தியாலயத்தின் கே. பிரதீபத் ஆகியோர் முதலிடங்களை பெற்றுள்ளனர்.

கொழும்பு - தேவி பாலிகா வித்தியாலயத்தின் என்.ஹேரத், கொழும்பு - சீ.எம்.எஸ் பாலிகா வித்தியாலயத்தின் ஏ. பெர்ணான்டோ, நுகோகொட - சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தின் ஆர். குமாரசிங்க ஆகியோர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.