Tuesday, March 13, 2018

How Lanka

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் சமூகவலைத்தளங்கள் மீண்டும் பாவனையில்

 எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கையில் அனைவராலும் முகநூலைப் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முகநூல் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் முகநூல் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் எதிரொலியாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை முழுவதும் அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்தின் கருத்து:

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில், பேஸ்புக் நிறுவனம் கருத்து வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுக்களை நீக்க இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து இலங்கையின் அரசாங்கத்துடனும், அரச சார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இனமுறுகலை ஏற்படுத்தும் பதிவுகள் தொடர்பில் தாங்கள் இறுக்கமான கொள்கையை பின்பற்றுவதாகவும், அவ்வாறான பதிவுகளை கண்டறிந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.