Wednesday, March 7, 2018

How Lanka

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலே கண்டியில் இடம்பெற்ற கலவரம்

இலங்கையை ஆட்சி செய்த மன்னர்கள் முஸ்லிம்களைக் கௌரவித்ததோடு அவர்கள் வாழவும் இடம்கொடுத்த பூமியில் அதே முஸ்லிம்களுக்கு எதிராக காட்டுத்தர்பார் நடத்தப்பட்டு கறைபடிந்த வரலாறு இப்போது எழுதப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்திலுள்ள திகன, தெல்தெனிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டு அவை தீவைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் கண்டி மாவட்டத்திலுள்ள எல்லா சமூகத்தினருடனும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். அதுவும் ஏனைய சமூகத்தினருடன் பெரும்பாலான பிரதேசங்களில் அருகருகே வசிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் திகன, தெல்தெனிய பிரதேசத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கும் இக்காட்டுத்தர்பார் நாட்டை உண்மையாக நேசிக்கின்ற எல்லாத் தரப்பினரையும் அதிர்ச்சியும் கவலையும் கொள்ளச் செய்துள்ளது.

இதேநேரம் இக்கலவரத்தில் ஈடுபட்ட கும்பலைக் கலைக்கவென பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேரைக் கைது செய்துள்ளனர்.

நிலைமை கட்டுக்கடங்காத நிலைமைக்கு சென்றதால் கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் மறுநாள் காலை வரையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ட்டது.

இதேவேளை இவ்வன்முறைகள் தொடர்பில் பாரபட்சமற்ற சுயாதீன விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கும் பாதுகாப்பு தரப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அறிவுறுத்தல் வழங்கினார்.

கண்டி மாவட்ட பாடசாலைகளும் நேற்று மூடப்பட்டன. நேற்றுக் காலை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட போதிலும் தெல்தெனிய, பல்லேகல பொலிஸ் பிரிவுகளுக்கான ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டது.

இவ்வாறான சூழலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஒருவார காலப்பகுதிக்கென அவசர காலநிலையை நேற்று பிரகடனப்படுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென உச்சக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தையும், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இக்கலவரம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம், பின்புலம் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு நடந்து கொண்டிருக்கின்றது. கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான ஐ.நா. சாசனத்தின் விஷேட தூதுவர் மிரெட் ராத் அல் ஹுசைன் மூன்று நாட்களை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவ்வாறான சூழலில்தான் இக்காட்டுத்தர்பார் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றது.

லொறியை பின்னகர்த்தும் போது ஆட்டோ வண்டியின் கண்ணாடியொன்று சேதமடைந்ததைக் காரணம் காட்டி குறித்த லொறியின் சாரதியை அந்த ஆட்டோ வண்டியில் சென்ற நால்வர் கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி இரவு தெல்தெனியவில் வைத்து தாக்கியுள்ளனர்.

அதனால் காயமடைந்த லொறி சாரதி வைத்தியசாலையில் தங்கி இருந்து சிக்சிசை பெற்ற நிலையில் கடந்த சனியன்று உயிரிழந்தார்.

அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை ஊரவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு, அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு உயிரிழந்த சாரதியின் இறுதிக் கிரியைக்கு ஒரு தொகை நிதியுதவியை வழங்கிய ஊரவர்கள், அவரது குடும்பத்தினருக்கு மேலுமொரு தொகையைத் திரட்டித்தரும் அதேவேளை, இவ்விவகாரத்திற்கு சுமுகமான இணக்கம் காணப்பட்டிருந்ததாக பிரதேசவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான் இறுதிக் கிரியையைப் பயன்படுத்தி இக்கலவரம் நடத்தப்பட்டிருக்கின்றது. சாரதியின் விவகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமறியலில் இருக்கையில் இக்காட்டுத்தர்பார் முன்னெடுப்பட்டிருப்பதை நோக்கும் போது இது முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு செயலாகவே விளங்குகின்றது.

என்னதான் இருந்தாலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளுக்கு சவால் விடுக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலுமே இக்கலகம் விளைவிக்கப்பட்டிருக்கின்றது.

இது நல்லாட்சி அரசுக்கு எதிரான சதி, சூழ்ச்சியின் வெளிப்பாடே என்பதில் ஐயமில்லை. இதில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் மறைகரம் இல்லாமலும் இருக்காது.இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து அவர்களது உண்மை நோக்கம், பின்புலம் என்பன குறித்து பரந்தடிப்படையில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கையுடனான உறவிலிருந்து தூரமாகி இருந்த பெரும்பாலான நாடுகள் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தான் மீண்டும் இந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண ஆரம்பித்தன. அதனால் இந்நாடு மீண்டும் இருண்ட யுகத்திற்குள் செல்ல இடமளிக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆகவே திகன, தெல்தெனிய சம்பவங்கள் குறித்து விரிவான அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு இவ்வாறான சம்பவங்கள் இனியொரு போதும் இந்நாட்டில் இடம்பெறாதிருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணங்க​ளைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு இனவாதமும், மதவாமும் தலைதூக்க இடமளிக்காத வகையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். அதுவே இன்றைய காலத்தின் அவசியத் தேவை.