இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் வெளிநாட்டு படுகடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...
கடந்த வாரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் மட்டும் வெளிநாட்டுக் கடன் தொகை 47 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 157.46 ருபாவிலிருந்து 159.04 ரூபாவாக உயர்வடைந்துள்ளதனால் வெளிநாட்டுக் கடன் தொகை உயர்வடைந்துள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கு 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒருவார காலத்தில் இந்தளவு தொகை கடன் அதிகரித்துள்ளது என அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
டொலருக்கான இலங்கை ரூபாவின் விற்பனைப் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியை அடைந்தது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கு அமைய, ஒரு டொலருக்கான ரூபாவின் விற்பனை பெறுமதி 159 ரூபா 04 சதமாக இன்று பதிவாகியது.
நேற்றைய தினம் ஒரு டொலருக்கான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 158.69 ரூபாவாக பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று அது மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஏற்றுமதியில் வளர்ச்சியின்றி, இறக்குமதியில் தங்கியிருப்பதே இந்த வீழ்ச்சிக்கான காரணம் என்று கூறப்படுகிறது
இந்நிலையில், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளில தாக்கம் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.