Tuesday, April 24, 2018

How Lanka

சோழர்கால புராதன ஆலயம் அம்பாறை - மாட்டுப்பளை மடத்தடியில் கண்டுபிடிப்பு

12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.

இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டுநிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.

இப்புராதன ஆலயத்தைப்பார்வையிட மக்கள் முண்டியடிப்பதைக்காணக்கூடியதாயுள்ளது. நேற்று அங்குசென்றவர்களை ஆலயத்தலைவர் கோவிந்தசாமி கமலநாதன் செயலாளர் கே.சண்முகநாதன் பொருளாளர் உள்ளிட்ட ஆலய நிர்வாகசபையினர் அழைத்துச்சென்று அப்புராதன இடங்களைக்காண்பித்தனர்.

சிதைந்த ஆலயத்தையும் அருகிலுள்ள தீர்த்தக்குளத்தையும் பாம்புகள் வாழும் புற்றினையும் காண்பித்தனர்.

பொலநறுவைக்காலத்தில் அவ் இராசதானியை ஆண்ட சோழர் இவ்வாலயத்தை இங்கு அமைத்திருக்கலாமென நம்பப்படுகின்றது. பொலநறுவைச் சிவன் ஆலயத்தைக்கட்டப் பயன்படுத்திய செங்கற்களே இங்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது.


14அங்குல செங்கற்களாலான இவ்வாலய சிதைவுகளுடன் சுற்றவரஉள்ள கட்டடத்தின் ஒருசில பகுதிகள் காணப்படுகின்றன.

காடுமண்டி மரம் புற்களுக்கு மத்தியில் செடிகொடிகளுக்கிடையில் மறைந்து இவ்வளவுகாலமும் இப்புராதன ஆலயம் மறைந்து இருந்திருக்கின்றது.

இவ்வாலயமருகில் சுமார் 50அடி தொலையில் தீர்த்தக்குளமொன்றும் இவ்வாறு காடுமண்டிக்காணப்படுகிறது. இங்கு அதிகமான நாகபாம்புகள் நிறைந்திருப்பதாகவும் அருகிலுள்ள புற்றில் இன்றும் 16அடி நீளமான கருநாகம் உலாவுவதாக ஆலயத்தலைவர் கோவிந்தசாமி கமலநாதன் தெரிவிக்கிறார்.


மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் தொன்மைவாய்ந்தது. வெள்ளி மற்றும் பூரணை தினங்களில் இங்கு கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களே அம்மனின் சக்திக்கு சான்றுபகர்கின்றன.

இங்கு புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆலயத்தில் மிகவிரைவில் கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுவருவதாகவும் ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் மேலும் சொன்னார்.