Monday, April 16, 2018

How Lanka

வவுனியா நகரசபையை இழந்த கடுப்பில் நகரசபை வளாகத்தில் கூட்டமைப்பு மோதல்

வுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்த நிலையில், சபையை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

சபையை இழந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் எம்.பி, அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் உடனடியாக அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர். சிவாஜிலிங்கத்துடன் சிறிது நேரம் தர்க்கம் நீடித்தது.
இதேவேளை, த.வி.கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி உறுப்பினர்களுடன் முரண்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தரப்பினர் கடத்தி சென்றே கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக, ஐ.தே.கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரும், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார்.


குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே சபை தவிசாளர் தெரிவில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் சகோதரருக்கும், ஐ.தே.கவின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமாளித்துள்ளர்.