Tuesday, May 8, 2018

How Lanka

நாடாளுமன்றில் வீழ்சியை நோக்கி ஆளும் கட்சி பலமாகும் கூட்டு எதிரணி

நாடாளுமன்றில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகித்து வந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டிருந்தனர். இதன்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கை சபாநாயகர் உள்ளடங்காது 129 ஆக குறைவடைந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 106 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.

எதிர்க்கட்சியில் 55 கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஜே.வி.பி.யின் 6 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் உள்ளிட்ட 95 பேர் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சி தற்பொழுது மேலும் வலுவாகியுள்ளது – மஹிந்த ராஜபக்ச

எதிர்க்கட்சி தற்பொழுது மேலும் வலுவாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்...

இவ்வாறு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டதன் மூலம் எதிர்க்கட்சி மேலும் பலம்பொருந்தியதாக மாற்றமடைந்துள்ளது.

அரசாங்கத்தின் நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவான புரிதல் உண்டு.நாட்டு மக்களின் ஒத்துழைப்பும் கூட்டு எதிர்க்கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.மக்கள் இன்று பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம்.

நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதாகவும் மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடிந்தால் அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமென மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.