Thursday, May 10, 2018

How Lanka

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை ஏற்றுகொண்ட யாழ் பல்கலைக்கழ மாணவர்கள்

வடக்கு முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு நாளை தனித்து அனுஸ்டிக்க முடிவு செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது என்று நாம் திட்டமிட்டதன் பிரகாரம் மக்கள் கனவை நிறைவேற்றியே தீருவோம். இதற்கான கலந்துரையாடல் நாளை காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும்.

இதில் யாழ்.பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவ பிரதிநிதிகள் மற்றும் கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்வார் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழினத்தின் ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் எனும் உயர்ந்த நோக்கம் கொண்ட சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்களும் பொது மக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகளை செய்த வண்ணம் உள்ளோம்.

ஆனால், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தை வைத்துக்கொண்டு மாணவர்களின் தூரநோக்குடனான செயற்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்த முனைகின்றமை மாணவ சமூகம் முன்னின்று நடத்துவதானது தமது சுயலாப அரசியலுக்கும் இளைய சமுதாயம் அரசியல் விடயங்களிலும் உணர்வு பூர்வமான விடயங்களிலும் நுழைந்து விடக்கூடாது என்று மாணவர் சமுதாயத்தினதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினதும் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

நாம் ஏன் நடத்துகின்றோம்

வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம்.

சாத்வீக போராட்டங்களை இரும்புக் கரங்களால் அரசு நசுக்கி விட்டது. இந்தநிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் தமிழ் பொதுமக்களை ஒரே தமிழினமாக ஒன்று திரட்டி தமிழ் மக்களின் உரிமைக்காக போராடினார்கள்.

இதற்காக அரசியல்வாதிகளையும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைத்து சர்வதேச ஆதரவையும் பெறத்தக்க வகையில் போராட்டத்தை நகர்த்தி சென்றிருந்தார்கள்.

ஆயுதப் பேராட்டம் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பன்னாட்டுச் சமூகத்தின் உதவியுடன் பேரினவாதம் மேற்கொண்ட கொடிய போரின் விளைவாக முள்ளிவாய்க்கால் மண்ணில் மௌனிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகராக மக்களை ஒன்றுதிரட்ட மக்களை தலைமை தாங்க அதுவும் குறிப்பாக இந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஒழுங்கமைத்து நடாத்தவோ, தலைமை தாங்கவோ நீங்கள் தகுதியுடையவர்களா என்று ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும்குறிப்பாக வடக்கு மாகாண சபை அங்கத்தவர்களும் உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

அரசியல் இலாபம் தேடுகின்றார்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தமது உறவுகளை இழந்து பல வலிகளைச் சுமந்த தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது மாணவர் சமூகத்தின் வேண்டுகோளாகும்.

மக்களின் அரசியல் பிரதிநிதிகளான தாங்கள் குறிப்பாக வடக்கு மாகாண சபை, கிழக்கு மாகாண சபை சார்ந்த அரசியல்வாதிகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலில் மக்களோடு சேர்ந்து கலந்துகொள்ளுங்கள்.

மாறாக மக்களின் பேரவலத்தைச் சந்தித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் அரசியல் இலாபத்தைத் தேட முயற்சி செய்யாதீர்கள்.

தமிழர்களின் ஒற்றுமையை தமிழ் மக்களை எந்தவித வேறுபாடுகளுமின்றி ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நிகழ்த்துவதன் மூலம் சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியை எடுத்துக்கூற வேண்டும்.

அரசியல் கலப்பு இன்றி புனிதமாக இந்த அவல நாளை நினைகூற வேண்டும். மக்களின் இழப்பில் எவரும் அரசியல் செய்யவோ பதவிகள் பெறவோ இடமளிக்கக் கூடாது.

என்ன காரணத்துக்காக தமிழினம் இந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் பேரிழப்பை சந்தித்ததோ அந்த உரிமையைப் பெறுவதற்கு அந்த புனிதநாளில் எந்த களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது. இவற்றை கருத்திற்கொண்டு யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்போதைய சூழ்நிலையில் தனது தார்மீக பொறுப்பபை உணர்ந்து கொள்கின்றது.

மாணவர்களே அக்கறையானவர்கள்

தமிழ் மக்களின் அரசியலில் ஏற்படும் முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தத்தக்க வகையில் மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன.

தற்போது இருக்கும் மந்தமான அரசியல் போக்கினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபைதான் நடத்த வேண்டும் எனும் முறைமையை நடைமுறைப்படுத்தினால் அது எதிர்காலத்தில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு ரீதியாக எழுச்சிகொண்டு தமது உரிமையை வென்றெடுப்பதைக் கேள்விக்குறியாக மாற்றிவிடும்.

அரசியல்வாதிகளைவிட மக்கள் பிரச்சினைகளில் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவு கரிசனையோடு ஈடுபாடு கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

அரசியல் பலம் என்பதற்கு அப்பால் மாணவர் சக்தி மாணவர் ஒன்றுபட்ட பலத்தைக் கொண்டு மக்களை ஒருங்கிணைத்து வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து ஒழுங்கமைக்கும் நினைவேத்தல் நினைவுக்கு வடக்கு மாகாண சபை இடையூறு இல்லாமல் ஆதரவை வழங்க வேண்டுமென்பதற்காக நாம் இரண்டு தடவைகள் அலுவலக ரீதியாக முதலமைச்சரைச் சந்தித்து அன்புரிமையோடு கேட்டிருந்தோம்.

ஆனால், மாணவர்களாகிய எமது கோரிக்கையுடன் உடன்படாமல் நிராகரித்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 7ஆம் திகதி திங்கட்கிழமை கலந்துரையாடுவோம் என வரச் சொல்லிவிட்டு எம்மோடு எந்தவிதத்திலும் எமது கருத்தை செவிமடுக்காமல் தாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்தை எமக்குத் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக எமக்கு அவர்களது தீர்மானத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடந்த மாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கலந்துரையாடலில் நாம் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருந்தோம்.

ஒத்துழைப்பு வழங்குங்கள்

கடந்த காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவே நாம் வடக்கு மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைப் பொறுப்பெடுத்து நடத்துவது பொருத்தமற்றது என்று கூறி வருகின்றோம்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த நிகழ்வை ஒழுங்கமைக்க கேட்பதைப் போல் ஒவ்வொருவரும் வந்து கேட்கலாம் என்று கூறுவது சரியான பாதையை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.

ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் உண்மையை உணர்ந்து மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.