Friday, May 11, 2018

How Lanka

ஜோஸ் பட்லர் அதிரடி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.

நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய ராயுடு 9 பந்தில் 12 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

வாட்சன் 39 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரெய்னா ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி 35 பந்தில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி விளாசி 52 ஓட்டங்கள் குவித்து விக்கெட் இழந்தார்.

கடைசியில் டோனி(33), சாம் பில்லிங்(27) ஓட்டங்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் சென்னை அணி 176 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


இந்த போட்டியில் ஒய்டு பால் மூலம் ராஜஸ்தான் அணி 10 ஓட்டங்கள் சென்னைக்கு உதிரியாக கொடுத்துள்ளது.

ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, 177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

ஸ்டோக்ஸ்(11), ரகானே(4), சஞ்சு சாம்சன்(21), பிரசாந்த சோப்ரா(8), பின்னி(22), கிருஷ்ணப்பா கவுதம்(12) ஓட்டங்களில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய பட்லர் அரை சதமடித்து அசத்தினார்.

பரபரப்பான கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தில் 2 ரன்களும், 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தனர்.

4-வது பந்தில் சிக்சர் பறந்தது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், பிராவோ, டேவிட் வில்லே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.