Sunday, June 17, 2018

How Lanka

மல்லாகத்தில் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

மல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்தப் பகுதியில் குழு மோதல் நடந்தது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று சம்பவம் நடைபெற்றவுடன் தகவல்கள் வெளியாகின.

சம்பவ இடத்தில் பெரும் பதற்ற நிலைமை காணப்பட்டால் நடந்த விடயங்களை உடனடியாக சேகரிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அங்கு போராட்டம் நடத்திய மக்களுடனும் கலந்துரையாடினார்.

அங்கு சற்றுப் பதற்றம் குறைவடைந்தது.

மல்லாகம் சகாய மாதா ஆலயத்தி பெருநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தினார். ஆலயத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை அங்கிருந்து அகற்றி குழப்பத்தைத் தடுக்க முனைந்தார். அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குழப்பத்தைத் தடுக்க முயன்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின்போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

“ஆலயத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டது உண்மைதான். இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் வந்தார். அவரை நான்கு இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர் (உயிரிழந்தவர்) கம்பியுடன் வந்தவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற முயன்றார். அப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இது நடந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பொலிஸார் வந்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. மோதலைத் தவிர்க்க வந்த இளைஞர் நெஞ்சில் குண்டடி பட்டு நிலத்தில் கிடந்து சத்தமிட்டார்.

சிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என்று சம்பவத்தின் போது நின்றவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, சில நாள்களாக மல்லாகத்தில் இரு தரப்பினரிடையே முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

சம்பவம் நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

அங்கு குழு மோதல் நடந்தமை தொடர்பில் முரண்பட்ட தகவல்களே தெரிவிக்கப்படுகின்றன.

பலர் ஒருவரைத் துரத்தி வந்தனர் என்ற தகவல்களும் தெரிவிக்கப்படுகின்றன.

துரத்தப்பட்டு வந்தவர் ஆலயத்துக்குள் சென்று மறைந்துவிட்டார் என்று கூறப்படுகின்றது.

எனினும் துரப்பட்டு வந்தவர் தொடர்பிலும் ஆயுதங்களுடன் துரத்தி வந்தவர்கள் தொடர்பிலும் அங்கிருந்தவர்களும் முரணான தகவல்களையே கூறுகின்றனர்.

யார் என்று தெரியாது என்று கூறுகின்றனர்.

மல்லாகம் மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்றார்.


அங்கு விசாரணைகளை மேற்கொண்டார்.
வீதியை மறித்துப் போராட்டம் நடத்திய மக்களுடன் பேசினார். விசாரணைகள் நடக்கும்போது வீதித் தடை ஏற்படுத்திப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிக்காத துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

வீதியில் கிடந்த கம்பிகள், தகரங்களை மீட்டு அந்தப் பகுதியில் மோதல் நடந்துள்ளது என்று, அவற்றைத் தடயப் பொருள்களாகப் பொலிஸார் நீதிபதியிடம் காண்பித்தனர்.

பொதுமக்களிடையே இருந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர். அவர்களை நீதிபதி எச்சரித்தார்.

சம்பவ இடத்தில் ஒளிப்படங்கள் எடுத்தவர்களைத் தடுத்த சிலர் கமராக்களை வாங்கி ஒளிப்படங்களை அழிந்ததையும் காண முடிந்தது.

இரு தரப்பிக்களிடையே மோதல் நடந்தது. அதைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனால் பொலிஸார் சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.