Monday, December 17, 2018

How Lanka

மகிந்த ராஜபக்சவிடம் சம்பந்தன் கேட்டது இது தானாம்

சந்திரிக்கா அம்மையார் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்த அதிகாரப் பகிர்வுக்கான அரசியலமைப்பு மாற்றத்தினை நீங்கள் செய்ய வேண்டும் என்று சம்பந்தன் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய சித்தார்த்தன்,

நாமல் ராஜபக்ச இரண்டுமுறை என்னோடு கதைத்தார். அதன்போது அவர் எங்களின் ஆதரவினை கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் நடுநிலை வகிக்குமாறு தான் கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று மகிந்த ராஜபக்ச சம்பந்தன் அண்ணாவிடம், ஆதரவு தாருங்கள் என்று கேட்கவில்லை. நடுநிலை தாருங்கள் என்று தான் கேட்டார்கள்.

இதேவேளை, மகிந்த தரப்பிடம் சம்பந்தன் கேட்ட வாக்குறுதிகளாக, சந்திரிக்கா அம்மையார் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவந்த அதிகாரப் பகிர்வுக்கான அரசியலமைப்பு மாற்றத்தினை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மகிந்த ராஜபக்ச சரியான பதிலைக் கொடுக்கவில்லை.

ஆனால் இது தொடர்பாக நாமல் ராஜபக்ச என்னிடம் பேசிய போது, அரசியலமைப்பு விவகாரம் தொடர்பாக நாங்கள் இந்த அரசாங்கத்தில் செய்ய முடியாது.

தேர்தலுக்குப் பின்னர் நாங்கள் 120 அல்லது 130 அங்கத்தவர்களுடன் வருவோம், நீங்களும் பத்து அல்லது 15 பேருடன் வந்தால் எங்களுக்கு இலகுவாக 150 பேருக்கு மேல் கிடைத்துவிடும். ஆகவே அதன் பின்னர் நாங்கள் இது தொடர்பாக செய்வோம். அதற்கு முன்னர் செய்ய முடியாது என்றார்.

நான் பழகியளவில் இருக்கக் கூடிய சிங்களத் தலைமைகள் சந்திரிகாவைத் தவிர்த்து அதிகாரப் பகிர்வினை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத தலைமைகள் தான். சிங்களத் தரப்புடன் பேசாமல் ஒரு தீர்பினைக் காணமுடியாது.

சம்பந்தன் தீர்வானது தைப்பொங்கலுக்கு, தீபாவளிக்கு என்று சொன்னாலும் அவருக்கும் தெரியும் அது இந்தச் சந்தர்ப்பத்தில் வராது என்று. ஆனால், அவர் தன்னுடைய வெளிப்பாட்டின் தன்மையில் அதைச் சொல்லிவருகின்றார் என்பதை நான் மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டிருக்கிறேன் என்றார்.