Tuesday, December 25, 2018

How Lanka

தேசிய ஜனநாயக முன்னணியாக பெயர் மாறவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி

ஐக்கிய தேசிய முன்னணியை, “தேசிய ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு பங்காளிக்கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜனவரி மாதம் முதலாம் வாரத்தில் இதற்கான நடவடிக்கை இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி இன்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலேயே மேற்படி கூட்டணி தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசிய முன்னணியை, தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.

கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை மறுதினம் இடம்பெறும் கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஜனவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டமைப்பின் விபரங்களை உத்தியோக பூர்வமாக அறிவிப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதனூடாக நாட்டில் உள்ள அனைத்த கட்சிகளையும் ஒன்றுத்திட்டி ஒருங்கிணைந்த ஒரு அமைப்பாக செயற்படுவதற்கு எதிர்பார்க்கினறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.