Sunday, October 23, 2016

How Lanka

கோலி ஒன்றரைச் சதம்: நியூசிலாந்தை வென்றது இந்தியா

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மொஹாலியில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில், ஏழு விக்கெட்டுகளினால் இந்திய அணி வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி, தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 49.4 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களையே பெற்றிருந்தபோதும், ஜேம்ஸ் நீஷம், மற் ஹென்றியின் இணைப்பாட்டம் காரணமாகவே 285 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், டொம் லதாம் 61(72), ஜேம்ஸ் நீஷம் 57(47), றொஸ் டெய்லர் 44(57), மற் ஹென்றி ஆட்டமிழக்காமல் 39(37) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேதார் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் அமித் மிஷ்ரா, ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

286 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 48.2 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. 41 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கோலி, டோணி இணை, தமக்கிடையே, 151 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று, வெற்றி இலக்கை இலகுவாக்கியது.

துடுப்பாட்டத்தில், விராத் கோலி ஆட்டமிழக்காமல் 154(134), மகேந்திர சிங் டோணி 80(91) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மற் ஹென்றி இரண்டு, டிம் சௌதி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, விராத் கோலி தெரிவானார்.