Wednesday, July 5, 2017

How Lanka

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக ஏமாற்றும் மோசடி கும்பல்! எச்சரிக்கை

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக சூட்சுமான முறையில் பண மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவிலுள்ள உணவு விடுதிகளில் அதியுயர் சம்பளத்திற்கு தொழில் வழங்குவதாக குறிப்பிட்டு, கும்பல் ஒன்றினால் மோசடி செய்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.

18 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு கனடா செல்கின்றது. அரசாங்கத்தினால் சிலர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என போலி பிரச்சாரம் செய்யப்படுகிறது.

விசாவை கையில் வழங்கும் வரை எந்தவொரு பணமும் கொடுக்கத் தேவையில்லை என அந்த கும்பலால், கனடா செல்ல விரும்புவோரிடம் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு செயற்படும் கும்பலில் தன்னை ஒரு அதிகாரி போன்று காட்டிக் கொள்வதற்கு நபர் ஒருவர் அடையாள அட்டையும் காண்பித்து மற்றவர்களை நம்ப வைக்கின்றனர்.

அதன் பின்னர் இந்த கும்பல் தொழிலுக்கு செல்ல எதிர்பார்க்கும் நபர்களின் கடவுச்சீட்டுகளை பெற்று கொள்கின்றார்கள்.

கடவுச்சீட்டு பெற்று கொள்பவர் இந்த நபர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தங்களுக்கான விசா வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ள பணம் செலுத்துமாறும் கூறுகின்றார்கள்.

அவ்வாறு கடவுச்சீட்டை வழங்கிய அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வைப்பு செய்து விட்டு விசா பெற்றுக் கொள்ளச் சென்றால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விடும் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.