Sunday, September 17, 2017

How Lanka

மீண்டும் சொதப்பிய அவுஸ்ரேலியா

சென்னையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

அவுஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பகல், இரவு ஆட்டமாக துவங்கியது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு, துவக்க வீரர்களாக ரகானே மற்றும் ரோகித் களமிறங்கினர்.
ஆட்டத்தின் நான்காவது ஓவரில் நாதன் கோல்டர், ரகானேவை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய தலைவர் கோஹ்லி மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் டக் அவுட் ஆகி அடுத்தடுத்து வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனால் இந்திய அணி 12 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின் களமிறங்கிய கீதர் ஜாதவ், ரோகித் சர்மாவுடன் இணைந்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. ரோகித் சர்மா 28 ஓட்டங்களிலும், ஜாதவ் 40 ஓட்டங்களிலும் வெளியேற இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 87 ஓட்டங்கள் எடுத்ததால் 200 ஓட்டங்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டோனி மற்றும் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி கெளரவமான இலக்கை நோக்கி சென்றது. சில ஓவர்கள் நின்று விளையாடிய பாண்ட்யா தனது அதிரடியை ஆரம்பித்தார்.

சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார். இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பாண்டியா அவுட்டானார்.

அதன் பின் இறுதி கட்டத்தில் டோனி அதிரடி காட்ட இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 83 ஓட்டங்களும், டோனி 79 ஓட்டங்களும் எடுத்தனர்.
282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க காத்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலிய அணிக்கு மழை குறுக்கிட்டதால், இப்போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

21 ஓவர்களுக்கு அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 164 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
அதன் படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு வார்னர்(25), ஹில்டன் ஹார்ட்ரைட்(1), தலைவர் ஸ்மித்(1), டிராவிஸ் ஹெட்(5) என அடுத்தடுத்து வெளியேறி அவுஸ்திரேலிய அணிக்க்கு அதிர்ச்சி அளித்தனர்.

அதன் பின் வந்த வீரர்களில் மேக்ஸ்வல்ஸ்(39) தவிர அனைவரும் சொதப்ப அவுஸ்திரேலிய அணி இறுதியாக 21 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் எடுத்து 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெளலியன் திரும்பிக் கொண்டிருந்த போது, டோனி களமிறங்கினார்.

டோனி மைதானத்திற்குள் வந்த போது, ரசிகர்கள் அனைவரும் டோனி..சிஎஸ்கே..டோனி..சிஎஸ்கே..என்று ஆரவாரம் செய்ததால், அரங்கமே அதிர்ந்தது.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே டோனியும் அதிரடி காட்டி அணிக்கு வெற்றிக்கு பெரிதும் உதவி கெத்து காட்டியுள்ளார்