Friday, October 13, 2017

How Lanka

ஜனாதிபதியின் படத்தை வரைந்து ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார் பதுளை பாடசாலை சிறுமி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாடசாலை சிறுமி ஒருவர் நேற்று காலை சந்தித்தார்.

சிறுமியின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என கோரிய குறித்த மாணவி, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் தான் ஜனாதிபதியின் படத்தை வரைந்துள்ளதாகவும், அதனை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்.

7 வயதான அமானி தாயிதா என்ற சிறுமி பதுளையில் இருந்து சென்றுள்ளார். எனினும் ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று தனக்கு கிடைக்கும் என அவரை சந்திக்கும் வரை நம்பவில்லை.


தன்னை சந்திப்பதற்கு எதிர்பார்த்து சிறுமி ஒருவர் ஜனாதிபதி வீட்டிற்கு முன்னால் நிற்பதனை ஜனாதிபதி அறிந்து கொண்டுள்ளார். இதன்போது அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரை சந்திப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

சிறுமியை அழைத்த ஜனாதிபதி, வருகை தந்தமைக்கான காரணத்தை கேட்டுள்ளார். ஜனாதிபதியை சந்தித்தவுடன் கடும் மகிழ்ச்சியடைந்த சிறுமி அந்த படத்தை ஜனாதிபதியிடம் வழங்கி அதனை சுவரில் ஒட்டி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தன்னை பார்ப்பதற்கு பதுளைக்கு ஒரு நாள் வருமாறும் வருவதற்கு முன்னர் தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்ட பின்னர் வருமாறு குறித்த சிறுமி ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

பதுளைக்கு வரும் போது சிறுமியை சந்திப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இதனை கேட்டு சிறுமியின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.