யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் ஆயுதம் ஏந்திய விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வலிகாமம் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் அண்மை காலமாக வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாள்வெட்டு குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, கடந்த சில நாட்களில் சந்தேகத்தின் அடிப்படையில் 50 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்றைய தினம் ஆயுதம் ஏந்திய விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்துகொண்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.