யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, 50 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினமும் இளைஞர்கள் இருவரை கோப்பாய் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கைது செய்திருந்தனர்.
யாழ். இராசபாதை வீதியில் முச்சக்கரவண்டியொன்றில் கூரிய வாளுடன் பயணித்த இரு இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தகல்கள் சில வெளியாகியுள்ளன. அந்தவகையில், கைது செய்யப்பட்டவர்கள் “தாரா” குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படங்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வாள்களுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருக்கும் ஒளிப்படங்களும் இருந்துள்ளன.
இவர்கள், வடமராட்சியை தளமாக கொண்டு இயங்கும் தாரா எனும் குழுவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.