Sunday, January 21, 2018

How Lanka

நாட்டின் அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள் – ஜனாதிபதி

மக்களின் பணத்தை திருடியவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில மட்டக்களப்பு – மாவடிவேம்பு பகுதியில் இன்று மாலை இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி நாட்டின் அரசியல்வாதிகளில் 50 வீதமானோர் திருடர்கள் என குறிப்பிட்டார்.

ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளை போன்று இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின்படி 2008 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அப்பாவி ஏழை மக்களின் கோடிக்கணக்கான பணத்தை திருடியவர்களுக்கு தாம் ஒருபோதும் மன்னிப்பு வழங்குவதில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய இலங்கையை உருவாக்குவதாக தான் சர்வதேச தலைவர்களுக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் அதனை செயற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கி வருவதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் பட்டதாரிகளின் பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்திருந்ததாகவும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார்.