Wednesday, January 10, 2018

How Lanka

தமக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் பதிலடி


நிதியுதவி நிறுத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பை பாகிஸ்தான் அதிரடியாக நிறுத்தியுள்ளது.

அமெரிக்க நிதியுதவியை பெற்று வந்த பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளவில்லை.

இதனால் பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பாதுகாப்பு நிதி ரூ.12 ஆயிரம் கோடியை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானை கோபமடையச் செய்தது.

இதற்கு பதிலடியாக பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையில் அமெரிக்காவுக்கு வழங்கி வந்த ஒத்துழைப்பு நடவடிக்கையை நிறுத்திக் கொள்வதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குர்ரம் தஸ்த்கிர் கான் அறிவித்துள்ளார்.

இஸ்லாமபாத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் அமெரிக்காவுடன் இருந்த ஒத்துழைப்பை நாங்கள் நிறுத்தியுள்ளோம்.

அமெரிக்காவுடன் தெளிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுதான் சரியான நேரம். ஆப்கனில் நிர்வாகம் இல்லாத பகுதிகளில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

பாகிஸ்தானின் முடிவு குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளை மாளிகை அதிகாரி ஸ்டீவன் கோல்ஸ்டீன் தெரிவிக்கையில்,‘‘பாகிஸ்தான் ஒத்துழைப்பு நிறுத்தப்பட்டால், மாற்று வழிகள் பல உள்ளன.

பாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தப்படுவது தற்காலிகம் தான். முற்றிலும் நிறுத்தப்படவில்லை. பாகிஸ்தானிடம் இருந்து எதிர்காலத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.