Saturday, January 20, 2018

How Lanka

கொழும்பு - யாழ். புகையிரதம் வழிமறிப்பு பொலிஸார் குவிப்பு

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதமொன்று வவுனியா, ஓமந்தை புகையிரத நிலையத்தில் வைத்து பொது மக்களால் வழிமறிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதமானது சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் வழிமறித்து வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஓமந்தை - விளாத்திக்குளம் கிராமத்திற்கான பாதையை மறித்து புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த புகையிரதம் மக்களால் வழிமறித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்ற போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறானதொரு நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக புகையிரதத்தை வழிமறித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சற்று முன் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் தலையீட்டினால் புகையிரதம் செல்வதற்கு வழிவிடப்பட்டுள்ளது.



இதேவேளை, ஒரு கிழமைக்குள் குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத் தருவதாக அவர் மக்களிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.