Wednesday, January 24, 2018

How Lanka

கடற்படையின் அசட்டையீனத்தால் குடாநாட்டை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்



யாழ்ப்பாணத்தில் நேற்று காலையில் இடம்பெற்ற கோர விபத்து ஒட்டுமொத்த குடாநாட்டையும் அதிர்ச்சியடையச் செய்தது.

எதிர்கால கனவுகளுடன் பாடசாலைக்கு சென்ற 9 வயதான திருலங்கன் கேசனா கோரமான முறையில் உயிரிழந்தார்.

புங்குடுதீவில் செயற்படும் கடற்படை முகாமுக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில் சிறுமி ஸ்தலத்தில் பலியானார்.

புங்குடுதீவில் ஐயாயிரத்திற்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் ஆறு கடற்படை முகாம்கள் செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

தேவைக்கு அதிகமான முகாம்கள் காணப்படுவதால், மேலதிக கடற்படை வாகனங்கள் அந்தப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.


இவ்வாறான நடவடிக்கையின் மூலம் இன்று காலையில் சிறுமியின் உயிர் காவு கொள்ளப்பட்டதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடற்படையினருக்கான உணவுப் பொருட்களை ஏற்றியிறக்கவே இந்த கவச வாசனம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்தப் பகுதியில் கவசவாகனம் அதிக வேகத்தில் பயணிப்பதால் பலர் அச்சம் கொண்ட நிலையில், இது குறித்து கோத்தம்பர முகாம் கட்டளை அதிகாரிக்கு அறிவித்துள்ளனர். எனினும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குறித்த கவசவாகனம் பல தடவைகளில் ஒளி விளக்குகள் இல்லாமல் இரவு வேளையில் பயணத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கவசவாகன சாரதியின் அசட்டையீனத்தால் இன்றைய அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் சிறுமியின் உயிரும் பறிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட விபத்து காரணமாக மாணவி பலியானதுடன், அவரின் உறவினர் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.