Wednesday, January 31, 2018

How Lanka

இலங்கையின் பந்து வீச்சை வெளுத்து கட்டும் வங்கதேசம்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்கள் குவித்துள்ளது.

வங்காள தேசம் சென்றுள்ள இலங்கை அணி, அந்நாட்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற வங்காள தேசம் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன்படி வங்காள தேசம் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், இம்ருல் கயீசும் களமிறங்கினர்.

இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த இக்பால் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ஓட்டங்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து மொமினுல் ஹக் களமிறங்கிய நிலையில், கயீஸ் 40 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மொமினுல் ஹக் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி வந்த மொமினுல் ஹக் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போன்று மாற்றினார். அதிரடி காட்டிய அவர் சதம் அடித்தார்.

எதிர்முனையில் சிறப்பாக விளையாடிய ரஹிம் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மொமினுல் ஹக் - முஷ்பிகுர் ரஹிம் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 236 ஓட்டங்கள் சேர்த்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லிட்டன் தாஸ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

வங்காள தேசம் அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 374 ஓட்டங்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் 175 ஓட்டங்களுடனும், மஹ்மதுல்லா 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும், தில்ருவான் பெரேரா, லக்‌ஷன் சந்தகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.