Tuesday, February 13, 2018

How Lanka

ரணிலுக்கு வலுக்கும் எதிர்ப்பு - பிரதமர் பதவிக்கு ஆப்பு

இலங்கை அரசியலில் நெருக்கடி நிலைகள் ஏற்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிடடுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக குறித்த அமைச்சர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவசியமான முறையில் தங்கள் கட்சியில் திருத்தங்கள் மேற்கொள்வதில் ரணிலுக்கு உடன்பாடில்லை. எதுவும் மாற்றங்கள் ஏற்படின் தங்கள் கட்சியினுள் மாத்திரமே இடம்பெற வேண்டும் என்பது பிரதமரின் நிலைப்பாடாகியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை இணைத்து தனி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தான் அமைச்சு பதவி வழங்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் நிலைப்பாட்டை நீக்கிக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தில் இருந்து விலகி சஜித் பிரேமதாஸவுக்கு அல்லது கரு ஜயசூரியவுக்கு தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியினுள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருவதாக பிபிசி மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை அப்புறப்படுத்துக - தயாசிறி ஜயசேகர 
 

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த முடிவுகளுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை வகிக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியாது எனவும் இதனால், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீன அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர, அமைச்சர் பதவியில் இருந்து விலக, அமைச்சில் இருந்து தனது பொருட்களை அப்புறப்படுத்தி வருவதாக வெளியாகி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களுடன் எமக்கு எந்த விரோதமும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவை அப்புறப்படுத்தி விட்டு அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள்.

மைத்திரியுடன் இருக்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களின் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த காரணம் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய மாட்டார்கள் எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.