Friday, February 16, 2018

How Lanka

பரபரப்பில் கொழும்பு - மைத்திரிபால விடுத்துள்ள எச்சரிக்கை

சமகால காலத்தில் கொழும்பு அரசியல் களத்தில் பரபரப்பான நிலையே காணப்படுகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை நீக்கி விட்டு மஹிந்தவின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட ஆட்சியை அமைப்பதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தருமாறு ஜனாதிபதி கோரியதாக கூறப்படுகிறது.

அவ்வாறு நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பதற்கு பெரும்பான்மை பலம் இருந்தால் அதனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நண்பகல் தொடக்கம், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக பதவியேற்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று இந்தக் கடிதம், ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பை திடீரென ரத்துச் செய்துள்ளார்.

அதேவேளை, இன்று காலை மஹிந்தவை கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில், சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜெயந்த சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு, சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு கூட்டு எதிரணி ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்சவிடம், சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கட்சியின் தீர்மானத்தை மீறி நடப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை களையெடுக்க தான் தயங்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பொன்று நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

எமது கட்சியைப் பொறுத்தவரை பிரதேச, பிராந்திய மற்றும் தேசிய அரசியலுக்கென்று சில இலக்குகள் இருக்கின்றன.

ஊழல், மோசடிகளை ஒழிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பன அவற்றில் பிரதானமானவையாகும். இவற்றுக்கு முன்னுரிமை அளிப்பது கட்சியில் அனைவரினதும் கடமையாகும்.

அதேபோன்று எமது கட்சி ஆட்சியமைக்கவுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தலைவர், உபதலைவரை தேர்வு செய்யும் விடயத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் தலையீடு செய்ய முடியாது. அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

அவ்வாறு யாராவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடப்பதை அறிய நேர்ந்தால் அவர்களின் தராதரம் பார்க்காது கட்சியை விட்டும் களையெடுத்து விடுவேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.