Friday, February 16, 2018

How Lanka

அணியில் இடம் கிடைக்காததால் புலம்பும் ரெய்னா,யுவராஜ்

தான் சிறப்பாக விளையாடிய போதும் இந்திய அணியில் இருந்து விளக்கப்பட்டுள்ளது மிகுந்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா, கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் இந்திய அணியில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அணியில் தன்னுடைய நீக்கம் குறித்து ரெய்னா கூறுகையில், ‘நன்றாக ஆடும் போதும் அணியிலிருந்து நீக்கப்படுவது என்னை பெரிதும் காயப்படுத்துகிறது, இப்போது யோ-யோ டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளேன்.

மேலும், வலுவாக என்னை உணர்கிறேன், இந்தக் காலக்கட்டத்தில் கடுமையான பயிற்சிகள் மேற்கொண்ட போது, இந்திய அணிக்காக மீண்டும் ஆடும் ஆசை வலுவாகத் துளிர்விட்டுள்ளது.


நான் இத்துடன் விடப்போவதில்லை, இந்திய அணிக்காக எவ்வளவு காலம் ஆட முடியுமோ, அவ்வளவு காலம் ஆட முயற்சி செய்வேன், 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் ஆட வேண்டும்.

மேலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக ஆடுவேன் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறவிரும்பும் யுவராஜ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற விரும்புவதாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி முடித்துவிட்டேன். இனி சாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று எனது உள்மனது உணரும் போது ஓய்வு முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் வருங்காலத்தில் தனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதுடன் பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

36 வயதாகும் யுவ்ராஜ் அண்மைக்காலமாக இந்திய தேசிய அணியில் இணைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.