Thursday, February 8, 2018

How Lanka

தற்போது நான் வெளிவிவகார அமைச்சர் இல்லை - மங்கள சமரவீர

தனது கையொப்பத்துடன் வெளியாகியுள்ள போலிக்கடிதம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வெளிவிவகார அமைச்சின் கடிதத் தலைப்பில் தயாரித்துள்ள இந்த போலிக்கடிதத்தில் என்னுடைய கையொப்பத்தைச் சேர்த்துள்ள கும்பலானது தனது மூடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தற்போது நான் வெளிவிவகார அமைச்சர் இல்லை என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளேன்” என அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய தமிழர் பேரவைக்கு என எழுதியுள்ள இந்த கடிதமானது லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பெர்ணான்டோ நடந்துகொண்ட விதம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கை தொடர்பான விடயத்தை உள்ளடக்கியுள்ளது.

பிரிகேடியர் பெர்ணான்டோ தொடர்பிலான விவகாரம் கடந்த நான்காம் திகதியே இடம்பெற்றது. எனினும், இரண்டாம் திகதி கடிதத்தை எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் என அடையாளப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.