Tuesday, March 6, 2018

How Lanka

வர்தகரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்த 16 வயது சிறுமி

16 வயதான சிறுமி ஒருவரைக் கொண்டு, வயதான வர்த்தகர்களிடம் கொள்ளையிட்டு வந்த நபர்களை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியை பயன்படுத்தி, வயதான வர்த்தகர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இரண்டு இளைஞர்களும், 16 வயதான சிறுமியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சிறுமி கடுமையாக போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொடகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான வர்த்தகர் ஒருவருக்கு சிறுமி தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அவரை காதலிப்பதாகத் தெரிவித்து ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.

சிறுமியின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு அத்துருகிரிய கொடகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலுக்கு சென்ற வர்த்தகரை இரண்டு இளைஞர்கள் தாக்கி அவரிடமிருந்த பணம் மற்றும் ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வர்த்தகர் அத்துருகிரிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட போது குறித்த சிறுமி போதைப் பொருள் பயன்படுத்தியிருந்ததுடன், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு செல்லாது, இளைஞர்களுடன் சுற்றித் திரிந்ததாகவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சிறுமிக்கு எதிராக ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.