Friday, March 30, 2018

How Lanka

சா.த பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கான டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்து செய்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும்  தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள சாதாரணதர பரீட்சையில் சித்தியெய்தி சாதனை படைத்த மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியிலேயே டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார் என்பது  அந்த மாணவியின் முயற்சிக்கும் அவரை கற்பித்த ஆசிரியர்கள் அவரது பெற்றோர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் என்பதுடன் நடந்துமுடிந்த சாதாரணதர பரீட்சையில் சிறந்த அடைவு மட்டத்தை எட்டி வடக்கு கிழக்கு மாகாணங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களும் பாராட்டுக்குரியவர்களே.



அத்துடன் பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளை அடையாது இருக்கும் மாணவர்களையும் அவர்களது முயற்சிகளையும் நிச்சயம் நாம் பாராட்டியே ஆகவேண்டும் என்பதுடன் அவர்களது எதிர்காலமும் சிறப்பாக கல்வித்துறையில் அமைய அனைத்து தரப்பினரும் முன்னின்று உழைக்க வேண்டும்.

எமது மாணவர்களிடம் அதிக திறன்களும் ஆற்றல்களும் இருந்தும் வடக்கு மாகாணசபை எமது மாணவச் செல்வங்களின் கல்வி மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளில் அதிக அக்கறையுடன் செயற்பட்டிருக்குமேயானால் மாணவர்களின் அடைவு மட்டங்கள் மேலும் அதிகரிக்கக்கூடியதாக இருந்திருக்கும்.  ஆனால் அவர்களது செயற்றிறனற்ற திட்டமிடப்படாத நடவடிக்கைகளின் காரணமாகவே எமது மாணவச் செல்வங்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்க முடியாது போகின்றது என்பதையிட்டும் நான் மனம்வருந்துகின்றேன்.

அந்தவகையில் எமது மாணவர்கள் கிடைத்த பெறுபேறுகளை ஆதாரமாகக் கொண்டு உயர்தரக் கல்வியை தொடர்ந்து முன்னெடுப்பதுடன் எதிர்காலத்தில் கல்வி உள்ளிட்ட சகல துறைகளிலும் முன்னேற்றமடைந்து அந்தந்தத் துறைகளில் மிளிரவேண்டும் என்பதே எனது பெருவிருப்பாகும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.