Friday, March 30, 2018

How Lanka

விரைவில் உங்களது தந்தை சுதாகரனை விடுதலை செய்வோம் - மைத்திரி உறுதி மொழி

பத்து வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை பெற்றஅரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது இரு பிள்ளைகளிடம் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர்சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை அவர்களுக்கு வழங்கினார்.

ஜனாதிபதி மாமா! எங்கள் அப்பாவை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என எங்களிடம் கூறினார் என்று ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வெளியேவந்து அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கூறினர்.

நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில் ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் இருவரும், அண்மையில் உயிரிழந்த ஆனந்தசுதாகரனின் மனைவியான யோகராணியின் தாயாரும் பங்கேற்றனர்.

இந்தச் சந்திப்பை கிழக்கில் ஆனந்தசுதாகரின் விடுதலைக்காகக் கையெழுத்துத்திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிழக்கில் ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்திப் பெறப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனுவை ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைக் கொண்டே ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நேற்று ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதன்படி கிழக்கு இளைஞர் அமைப்பைச் சேர்ந்தசிலரும், ஆனந்த சுதாகரின் பிள்ளைகளும் நேற்று ஜனாதிபதியை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.இதன்போது சுதாகரின் பிள்ளைகளுடன் ஜனாதிபதி பேசினார்.

தமது தாயும் இறந்தமையால்தாம் தனித்து விடப்பட்டுள்ளனர் என்றும், தந்தையும் இல்லாமல் தம்மால்வாழ முடியாதுள்ளதாகவும், அப்பாவை விரைவில் விடுவித்து தமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவ வேண்டும் எனவும் சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியிடம் இதன்போதுகோரினர்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, விரைவில் சுதாகரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என அவரது பிள்ளைகளிடம் உறுதியளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலை ஆனந்தசுதாகரின் பிள்ளைகளும் சந்திப்பு முடிந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே வந்து வழங்கிய பேஸ்புக் நேரலை உரையாடலில் தெரிவித்தனர்.

முன்னதாக, அரசியல் தண்டனைக் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் தமது தந்தைக்குப்பொதுமன்னிப்புக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கருணை மனுசமர்ப்பித்தனர். இந்த மனு வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அத்துடன், ஆனந்த சுதாகருக்குப் பொமன்னிப்பு வழங்கக் கோரி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டன.

அவரது விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பு உட்படப் பலபகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

சச்சிதானந்தம் ஆனந்தசுதாகர் 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டார்.

அவருக்கு கடந்த வருடம் ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர் மகஸின் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றார்.

ஆனந்தசுதாகரின் மனைவி யோகராணி நோய்வாய்ப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். மனைவியின் இறுதிக் கிரியைகளுக்காக ஆனந்த சுதாகர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

மகஸின் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர் 3மணி நேரங்களில் மீள அழைத்துச் செல்லப்பட்டார். தனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்த வேளை ஆனந்தசுதாகர் அரசியல் கைதியாக தடுப்பில் வைக்கப்பட்டார்.

அதனால் தந்தையின் அரவணைப்பை நாடிய அவரது மகள் அவரைப் பிரிய விரும்பவில்லை. அதனால் அந்தச் சிறுமியின் தந்தையுடன் பஸ்ஸில் ஏறிச் சிறைச்சாலைக்குச் செல்லமுற்பட்டாள். அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை நேரில் பார்த்த பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

இந்நிலையில், தாயை இழந்து பெற்றோரின் ஆதரவின்றி தவிக்கும் ஆனந்தசுதாகரின் மகன்க விரதன் மற்றும் மகள் சங்கீதா இருவரும் தந்தைக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கருணை மனு முன்வைத்தனர்.

அத்துடன், ''எங்கட அப்பாவை விடச் சொல்லி உங்கட அப்பாக்குச் சொல்லுங்க'' என்று ஜனாதிபதியின் மகளான சதுரிக்காவுக்கும் ஆனந்த சுதாகரின் மகள் சங்கீதா கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது