Thursday, March 15, 2018

How Lanka

இலங்கை ஜனாதிபதி மைத்திரியை வெருட்டிய இந்திய பிரதமர் மோடி

இலங்கை, சீனாவுக்கு அளவையும் மீறி கதவை திறந்து விட்டுள்ளதாகவும் இதனால், இலங்கைக்கு மட்டுமல்லாது முழு இந்திய பிராந்தியமும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற சூரிய மின்சக்தி மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மோடியை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகிய இரண்டு உடன்படிக்கைகளிலும் இந்த இரண்டு இடங்களையும் போருக்கான நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.


அப்போது “போரில் ஈடுபடும் போது எந்த உடன்படிக்கை காகிதங்களை பார்த்து போரிட போகிறான்” என இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து இந்த உடன்படிக்கைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் பிரதமர் தலைமையிலேயே உடன்படிக்கைகள் தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள இந்திய பிரதமர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்து இந்திய நல்ல புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அவரை இந்திய நன்கு அறியும் என்றும் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பூரில் இந்தியாவின் நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலைய திட்டத்தை நிறுத்தியது யார் என்பதை இந்திய அறியும் எனவும் மோடி தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

இலங்கை, மாலைத்தீவு, பாகிஸ்தான் நாடுகளில் அரசியல் , பொருளாதார ரீதியாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பிராந்திய வல்லரசான இந்தியாவிற்கு பாதுகாப்பு உட்பட பல துறைகளில் நெருக்குவாரங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மாலைதீவில் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளின் போது தலையிட்டு வந்த இந்தியாவுக்கு தற்போது அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் தலையிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனது இராணுவத்தை பயன்படுத்தி மாலைதீவு அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த சீனா, மாலைதீவு உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கு பதிலாக அந்நாட்டின் இறையாண்மை மதிப்பு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என கூறியிருந்தது.

ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து தெளிவுப்படுத்த நட்பு நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பிய மாலைதீவு, இந்தியாவுக்கு தூதுவரை அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் ராடர் கோபுரம் தான் பிரச்சினை

இலங்கையின் தென்பகுதியில் ராடர் கோபுரம் ஒன்றையும், கடல் வலய மீட்பு ஒத்துழைப்பு நிலையம் ஒன்றையும் நிறுவவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

இதனூடாக இலங்கையில் இருந்து இந்தியாவின் கப்பல்களை உளவு பார்க்க திட்டமிடுகிறதா? என்ற அடிப்படையில் அந்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் இந்தியா பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி தொடர்ந்தும் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகிறது.

எனினும், குறித்த பகுதியில் இராணுவ நடவடிக்கைகளுக்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.