Wednesday, March 7, 2018

How Lanka

கண்டியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் பௌத்த துறவிகள்

கண்டி மாவட்டத்தில் வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்தப் பகுதி முற்றாக செயலிழந்துள்ளது.

காலவரையற்ற பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வன்முறையாளர்களின் நடவடிக்கை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சிறுபான்மை இன மக்களின் உடமைகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் கும்பல் ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இந்நிலையில் உயிராபத்துக்கு முகங்கொடுத்துள்ள முஸ்லிம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கெலிஓய விகாராதிபதி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களை பாதுகாப்பதாக விகாரையின் ஒலிவாங்கி ஊடாக பகிரங்கமாக அறிவிப்புக்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அந்தப் பகுதி சிங்கள மக்களும் முஸ்லிம்களை பாதுகாப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை வன்முறையாளர்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை யட்டிநுவர கொப்பேகடுவ பிரதேசத்தை சேர்ந்த நெல்லிகல சர்தேச பௌத்த நிலையத்தின் பௌத்த துறவிகள் சிலர் காப்பாற்றியுள்ளனர்.

தங்கள் விகாரைக்கு அருகில் வசிக்கும் முஸ்லிம் மக்களை தேரர்கள் இணைந்து காப்பாற்றியுள்ளதாக கண்டி, அஸ்கிரி விகாரையின் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முருதலாவ நகரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களிடம் இந்த முஸ்லிம் மக்கள் சிக்கியுள்ளனர். அவ்வாறான நிலையில் அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பிக்குகள் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.