Tuesday, April 24, 2018

How Lanka

16 அமைச்சர்களும் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு ஜனாதிபதி அனுமதி

அரசாங்கத்திலிருந்து அண்மையில் வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும் எதிர்க்கட்சியில் அமர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்...

அரசாங்கத்தை விட்டு விலகிய சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வது குறித்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுவினை விரைவில் கூட்டுவது தொடர்பில் லண்டனுக்கு சென்று ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்திருந்தோம்.

அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 பேரும் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியில் அமரப் போவதாக ஜனாதிபதியிடம் கூறியுள்ளோம்.

இந்த பதினாறு பேரில் எவரும் மீளவும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சிலர் விரைவில் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர், அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே நாம் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டோம்.

இந்த அரசாங்கம் ஒரு சில நல்ல விடயங்களை செய்துள்ளது. எனினும், 2020ம் ஆண்டில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்குதவற்கு நான் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.