கொடிய யுத்தம் எமது பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த காலத்திலும் எமது இனத்தின் கலை கலாசாரங்கள் அழிவுறாது பேணிப் பாதுகாத்தவர்கள் நாம். அந்த வகையில் இன்றுள்ள அமைதிச் சூழலில் எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களையும் கலாசாரங்களையும் மேலும் உறுதிமிக்கதாக வளர்த்துச் செல்ல நாம் அயராது உழைக்கத் தயாராக இருக்கின்றோம் என வேலணை பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்..
புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் -
எமது இனத்திற்கென ஒரு தனித்துவம் உண்டு. அந்தத் தனித்துவத்திற்குள் இருக்கும் எமது இனத்தின் கலை கலாசாரங்கள் உலகுக்கே உதாரணங்களாக இன்றும் திகழ்கின்றன.
ஆனாலும் அழிவு யுத்தம் எமது தேசத்தை மூன்று தசாப்தங்கள் ஆக்கிரமித்திருந்ததனால் எமது கலைகளை வளர்ப்பதில் பல பின்னடைவுகள் காணப்பட்டிருந்தன. ஆனாலும் அந்த யுத்த காலத்திலும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் தனது அயராத முயற்சியினால் பல்வேறு திட்டங்களை உருவாக்கி எமது இனத்தின் கலை கலாசாரங்களை அழியாது பேணிக்காத்து வந்துள்ளார். இதற்கு யாழ்ப்பாணத்தில் பல சான்றுகள் காட்சியளிக்கின்றன.
அந்தவகையில் கலைகளுடன் கலாசாரத்தையும் வளர்ப்பதற்கு நாம் பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் உழைக்கவேண்டும். இதற்காக எமது கட்சி தொடர்ந்தும் கடுமையாக உழைக்கும் என்றும் தெரிவித்த தவிசாளர் கருணாகர குருமூர்த்தி புங்குடுதீவு பகுதியில் காணப்படும் பற்றைகளையும் புதர்களையும் மக்களுடன் இணைந்து அகற்றி பாதுகாப்பானதும் சுகாதாரம் மிக்கதுமான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியானது EPDP இன் ஊடகப்பிரிவினரால் எமது செய்திப்பிரிவின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டவை