Monday, April 23, 2018

How Lanka

எது சரியான வெசாக் பௌர்ணமி தினம் - பௌத்தர்களிடையே பெரும் குழப்பம்

வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் பெரும் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் திகதி இலங்கையில் வெசாக் பௌர்ணமி தினம் அனுட்டிக்கப்படவுள்ளது. எனினும், மரபுகளை மீறி இலங்கையில் தான்தோன்றித் தனமாக வெசாக் பௌர்ணமி தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கண்டி மல்வத்து துணை பீடாதிபதி கலாநிதி நியாங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் இது பற்றி விளக்கம் அளிக்கையில்...மே மாதம் வரும் பௌர்ணமி தினமே வெசாக் பௌர்ணமியாக கருதப்படுகின்றது.

சர்வதேச வெசாக் தினத்தைப் போன்றே உலகின் ஏனைய பௌத்த நாடுகளிலும் இம்முறை மே மாதம் 29ம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எனினும், இலங்கையில் வெசாக் பௌர்ணமி தினம் ஏப்ரல் மாதம் 29ம் திகதி அனுடிக்கப்படுவது நகைப்பிற்குரியது.

மே மாதத்தை வெசாக் மாதமாகவும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தை வெசாக் தினமாகவும் அனுட்டிப்பது இலங்கை பௌத்தர்களின் மரபாக காணப்படுகின்றது.

இந்த மரபுகளை மீறி இம்முறை ஏப்ரல் மாதம் வெசாக் பௌர்ணமி தினம் அனுட்டிக்கப்படுகின்றது.

கௌதம புத்தரை நோக்கி புண்ணியம் செய்யும் வெசாக் பௌர்ணமி தினத்தை தங்களுக்குத் தேவையான வகையில் மாற்றியமைப்பது எந்த வகையிலும் பொருத்தமற்றது.

ஏப்ரல் மாதம் 29ம் திகதி வரும் பௌர்ணமி தினம் சித்திரா பௌர்ணமியாகும். சாக அரச பரம்பரையின் அடிப்படையில் இந்த பௌர்ணமியை ஆதி பௌர்ணமி என்றழைப்பதில் தவறில்லை. எனினும், இதனை வெசாக் பௌர்ணமியாக கருதப்பட முடியாது.

தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் வெசாக் தினமாக மே மாத இறுதியில் வரும் பௌர்ணமி தினத்தையே கருதுகின்றனர்.

எவரினதும் ஆலோசனைக்கு அமைய பௌத்த மரபுகளை மீறிச் செயற்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இவ்வாறான ஏதேச்சதிகாரமான தீர்மானங்களினால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என மல்வத்து துணைப் பீடாதிபதி கலாநிதி நியாங்கொட ஸ்ரீ விஜிதசிறி தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.