Thursday, May 3, 2018

How Lanka

பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் அதிபர் மீது தாக்குதல் - காரணம்...?

கிளிநொச்சி - பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் கடமை நேரத்தில் பாடசாலை அலுவலகத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், அதேபாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவரின் கணவரே இவ்வாறு அதிபரைத் தாக்கியுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வலயக் கல்வித் திணைக்களம், கோட்டக்கல்வி பணிமனை ஆகியவற்றில் முறையிடப்பட்டுள்ளது.

பாடசாலையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் ஆசிரியை ஒருவர் பாடசாலையில் பொருள் கொள்வனவில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் வலயக்கல்வி பணிமனையால் விசாரணை மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதற்கு அதிபர் காரணமாக இருப்பதாகத் தெரிவித்து குறித்த ஆசிரியையின் கணவர் இன்று பகல் பாடசாலை நேரத்தில் பாடசாலைக்குச்சென்று அதிபரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மற்றும் வலயக்கல்விப் பணிமனையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதவேளை, குறித்த ஆசிரியை நீண்டகாலமாக இந்த பாடசாலையில் கடமையாற்றி வருவதனால் மூன்று தடவைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோதும், அரசியல் பின்னணியில் அவரது இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டதாகவும், ஆசிரியை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு அதிபர் அல்லது ஆசிரியர் மீது தாக்குபவர்கள் கல்வியை பின்நோக்கித்தள்ளுகின்ற அல்லது கல்வியை அழிக்கின்ற ஒரு செயலாக அமையும் என இணைத்தலைவர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.